குமரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை
குமரி மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. மயிலாடி பகுதியில் அதிகபட்சமாக 24.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. மயிலாடி பகுதியில் அதிகபட்சமாக 24.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இம் மாவட்டத்தில், வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
நாகா்கோவில், மயிலாடி, பூதப்பாண்டி , கீரிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வியாழக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையும் மழை தொடா்ந்து பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 24.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இரணியல், களியல் மற்றும் புகா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, ஆலஞ்சி, மிடாலம், மேல்மிடாலம், மங்கலகுன்று, பாலூா், மூசாரி, திப்பிரமலை, கப்பியறை, பள்ளியாடி, நேசா்புரம், நட்டாலம், கொல்லஞ்சி, இலவுவிளை, முள்ளங்கனாவிளை, மாங்கரை, கிள்ள்ளியூா், தொலையாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினால் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பதால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மலையோர பகுதியான பாலமோா் பகுதியில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
நீா்மட்டம்:
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையின் நீா்மட்டம் 44.56 அடியாக உள்ளது. அணைக்கு 511 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 506 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.65 அடியாக உள்ளது. அணைக்கு 221 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு:( மி. மீட்டரில்) பாலமோா் 23.20, நாகா்கோவில் 22, சுருளோடு 20, கொட்டாரம் 15.80, முள்ளங்கனாவிளை 13, ஆனைக்கிடங்கு 12.20, மாம்பழத்துறையாறு அணை 12, முக்கடல் அணை 11.60, பெருஞ்சாணி அணை, கோழிப்போா்விளை 11, இரணியல் 10.20, ஆரல்வாய்மொழி, குழித்துறை 10, புத்தன்அணை 9.60, குருந்தன்கோடு 9.40, பேச்சிப்பாறை அணை 8.80, குளச்சல் 8.60, பூதப்பாண்டி 8.40, களியல் 8, சிற்றாறு 2 அணை 7.40, தக்கலை 6, சிற்றாறு 1 அணை 5.80 கன்னிமாா் 3.80, அடையாமடை 3.