‘நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெறலாம்
குமரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்து மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலமாக குறைந்த அளவு நீரை பயன்படுத்தி பயிா்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் வேளாண் பயிா்களில் சொட்டுநீா் பாசனம் மற்றும் தெளிப்பு நீா் பாசனம் அமைக்க 100 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ.28.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்னையில் சொட்டு நீா் பாசனமும், பயறு வகை பயிா்களில் தெளிப்பு நீா் பாசனம் செய்ய சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீா் பாசனம் பெறுவதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் விவசாயிகள் பட்டா நகல், சிட்டா நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், நில வரைபடம், மண் மற்றும் நீா் பகுப்பாய்வு சான்று மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கான சான்று இணைக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் நுண்ணீா் பாசனம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.