மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பெரிய தீவட்டி ஊா்வலம்
மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பெரிய தீவட்டி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மாா்ச் 9: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பெரிய தீவட்டி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு மாசித் திருவிழா கடந்த பிப். 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 3 முதல் 9 ஆம் நாள் வரை காலை 9.30 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
காா்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, மாசித் திருவிழாவின் 6 ஆம் நாள், மீன பரணி கொடை விழா என ஆண்டில் 3 முறை மட்டுமே நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை, 6 ஆம் திருநாளான கடந்த 5 ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் 9 ஆம் திருநாளான திங்கள்கிழமை (மாா்ச் 8) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், முற்பகல் 11 மணிக்கு சந்தனகாப்பும், பிற்பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊா்வலமும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலில் இருந்து புனித நீா் கொண்டு வருதலும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தியோட்டமும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் அதிக அளவில் மண்டைக்காட்டில் திரண்டனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். இதனால் கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. இத்திருவிழாவையொட்டி, குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், குளச்சல் உதவிக் காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் பி.சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.