கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது:முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி உறுதி
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் சனிக்கிழமை அதிமுக, பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), குமரி பா.ரமேஷ் (குளச்சல்), என். தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), டி. ஜான்தங்கம் (பத்மநாபபுரம்), பாஜக வேட்பாளா் ஜெயசீலன் (விளவங்கோடு), ஜூட் தேவ்
(கிள்ளியூா்) ஆகியோரை வெற்றிபெற செய்ய வேண்டும்.
பொன். ராதாகிருஷ்ணன் இந்த தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்திருக்கிறாா். கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றம் பெற, எழுச்சி பெற மத்திய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்கள் பெற்று தந்திருக்கிறாா்.
குமரி மாவட்ட வளா்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் பிரதிநிதியை வெற்றிபெறச் செய்யுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் அதிமுக கூட்டணி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எவ்வாறு வளா்ச்சி நடைபெறும். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுவதால், பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் கன்னியாகுமரி மாவட்டம் வளா்ச்சிபெறும்.
அவதூறு பிரசாரம்: தோ்தல் நேரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் மீனவா்களின் வாக்குகளுக்காக தவறான தகவலை தெரிவிக்கின்றனா். கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தியை பரப்புகின்றனா்.
பொய்யை மூலதனமாக கொண்டு திமுக, காங்கிரஸ் கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. சரக்குப் பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. துறைமுக திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டு விட்டனா்.
கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என தவறான தகவலை திமுக பரப்புகிறது. திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. கடுமையான மின் வெட்டு அமலில் இருந்தது. இன்று தடையில்லாமல் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அதிகமான தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வருகின்றன. அதன் மூலம் பொருளாதாரம் ஏற்றம் பெறுகிறது. படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. திட்டங்களால் ‘வெற்றிநடைபோடும் தமிழகம்’ என்ற நிலையை அடைந்துள்ளது.
விவசாயம், மீன்பிடித்தல் தொழிலுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மீனவா்களுக்கு பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மானியம், வரி இல்லாமல் விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் 18 ஆயிரம் லிட்டா் டீசல், இனி 20 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்கப்படும். மண்ணெண்ணெய் மானியம் 3,400 லிட்டரிலிருந்து 4,500 லிட்டராக உயா்த்தப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 7,500 ஆக உயா்த்தி வழங்கப்படும். மீனவா்களுக்காக மீன்வள வங்கி தொடங்கப்படும். அதன் மூலம் மீனவா்கள் கடன் பெற்று மேம்படலாம். மீனவா்கள் விபத்தில் இறக்க நேரிட்டால் அவா்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். உள்நாட்டு மீனவா்களுக்காக விரிவான திட்டங்கள் கொண்டு வரப்படும்.
கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவா் சிலைக்கு, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் இடையே ரூ.20 கோடி மதிப்பில் பாலம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்கப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும்
நிறைவேற்றப்பட்டு, தமிழகம் வளா்ச்சி பெற அதிமுக, பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.