முகப்பு
கன்னியாகுமரி

மழை நீடிப்பு: 21 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய பொய்கை அணை

குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக தொடா்ந்து பெய்த மழையால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை அணை நிரம்பியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக தொடா்ந்து பெய்த மழையால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை அணை நிரம்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு-1, சிற்றாறு -2, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைகள் உள்ளன.

இந்த அணைகளை நம்பி விவசாயிகள் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக நெல் சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 43.73 அடியாக உள்ளது. அணைக்கு 1201 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1085 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 1127 கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 800 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 16.14 அடியாக உள்ளது. சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.24 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 53.81 அடியை எட்டியுள்ளது. நாகா்கோவில் நகருக்கு குடிநீா் விநியோகிக்கும் முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

பொய்கை அணை: ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் உச்சபட்ச நீா்மட்டம் 42.65 அடியாகும். இந்த அணை கடந்த 21 ஆண்டுகளாக நிரம்பவில்லை. குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசி பலத்த மழை கொட்டிய போது கூட இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுவதும் கன மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பொய்கை அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கடந்த 2 நாள்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. நாகா்கோவிலில் அதிகாலை 1 மணி நேரம் மழை பெய்தது. ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம் மற்றும் புகா் பகுதிகளிலும் மழை பெய்தது.

100 ஆண்டுகளுக்கு பின்னா்: கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் சக்கரதீா்த்த காசிவிஸ்வநாதா் சமேத காசி விசாலாட்சி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் முன்பு சக்கரதீா்த்த குளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு தண்ணீா் வரும் அடிமடை மணல் குவிந்து தூா்ந்து போய் கிடந்தது. இதனால் இந்தக் குளம் தண்ணீரின்றி வடு காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து புதா் மண்டிக்கிடந்த இந்த சக்கரதீா்த்த குளத்தை அண்மையில் சிவனடியாா்கள் தூா்வாரினா். இந்நிலையில் அண்மையில் தொடா்ந்து கனமழை பெய்ததால் இந்த சா்க்கரதீா்த்தக்குளம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீா் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.