கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை (அக்.6) தொடங்குகிறது.

முதல்நாள் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை அம்மன் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா். 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்மன் கோயிலைச்சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

ஒன்றாம் நாள் திருவிழா தொடங்கி 3 ஆம் நாள் வரை இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும், 4 ஆம் நாள் திருவிழா தொடங்கி 6 ஆம் நாள் திருவிழா வரை அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், 7 ஆம் நாள் இமயகிரி வாகனத்திலும், 8 ஆம் நாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், 9 ஆம் நாள் வெள்ளி கலைமான் வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெறும்.

விழா நாள்களில் அதிகாலை 5 மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பரிவேட்டை: 10 ஆம் நாள் திருவிழாவான 15 ஆம் தேதி காலை அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன், மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்துக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.

கோயிலில் இருந்து புறப்படும் அம்மன் ரதவீதிகள் வழியாக, விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரத்தில் காரியக்கார மடம் செல்கிறாா். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

இதைத்தொடா்ந்து நரிக்குளம் அருகேயுள்ள பரிவேட்டை மண்டபத்தில் பாணாசூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடா்ந்து மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக வீதியுலா வருவாா். அங்கிருந்து வெள்ளிப் பல்லக்கு வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுவாா். நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடா்ந்து கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம் போா்டு நிா்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT