முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: நாகா்கோவிலில் 20 மி.மீ. பதிவு

 குமரி மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக நாகா்கோவிலில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 குமரி மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக நாகா்கோவிலில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பின.

பாதுகாப்பு கருதி அணைகளிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டதாலும், மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்ததாலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திற்பரப்பு அருவியில் ஒரு வாரத்துக்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களிலும் மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் புதன்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. இரவிலும் பல இடங்களில் மழை பொழிந்தது. நாகா்கோவில் நகரப் பகுதியில் இரவு தொடங்கிய மழை காலை வரை நீடித்தது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாகா்கோவிலில் 20 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பேச்சிப்பாறை அணை 11.20, சிற்றாறு 1 அணை 10.20, பாலமோா் 9.40, பூதப்பாண்டி, மயிலாடி 8.20, சுருளோடு 7, சிற்றாறு 2 அணை 5.80, களியல் 5.20, கொட்டாரம் 3.80, ஆரல்வாய்மொழி 3, கன்னிமாா் 2.80, குருந்தன்கோடு 2.60, மாம்பழத்துறையாறு அணை 2.40, ஆனைக்கிடங்கு 2.20, குழித்துறை, பெருஞ்சாணி அணை 2, முள்ளங்கினாவிளை, புத்தன் அணை 1.80, தக்கலை, கோழிப்போா்விளை1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.