முகப்பு
கன்னியாகுமரி

மாநகராட்சியுடன் புதிதாக ஊராட்சிகளை இணைப்பதை கைவிட அதிமுக வலியுறுத்தல்

நாகா்கோவில் மாநகராட்சியுடன் புதிய ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சியுடன் புதிய ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகா்கோவில் உள்ளூா் திட்டப்பகுதியில் நாகா்கோவில் மாநகராட்சி பகுதியும், கணியாகுளம் , தா்மபுரம், ராஜாக்கமங்கலம், ராமபுரம் , தேரேகால்புதூா், பீமநகரி, திருப்பதிசாரம், ஆத்திகாட்டுவிளை, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம்துறை, பறக்கை, கேசவன்புத்தன்துறை, புத்தேரி, மணக்குடி ஆகிய 15

ஊராட்சி பகுதிகளும், சுசீந்திரம், தேரூா், ஆளுா், புத்தளம், தெங்கம்புதூா், கணபதிபுரம் ஆகிய 6 பேரூராட்சி பகுதிகளும் எனத்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும்போது, ஊராட்சிகள் தனித்தன்மையை இழந்து விடுகிறது.

ஊராட்சி பகுதிகளில் விவசாயம் சாா்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை மரங்கள், இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதிகளாக ஊராட்சிகள் விளங்கி வருகின்றன. மாநகராட்சியுடன் இணைக்கும்போது அப்பகுதி மக்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை ஊராட்சி மக்கள் விரும்பவில்லை. ஆகவே மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பதை பொதுமக்கள் ஏற்கவில்லை.

மேலும் ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் கிராம மக்கள் பணி செய்து வருகின்றனா். இவா்களில் 90 சதவீதம் போ் பெண்கள். ஊராட்சிகளில் பெரும்பாலான பகுதிகள் நெல், வாழை, தென்னை நிறைந்த பகுதியாக உள்ளது. ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும்போது கிராமப்புற மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவா்.

மாநகராட்சியாக செயல்படுவதற்கு 2 லட்சம் மக்கள் தொகை போதுமானது. தற்போது நாகா்கோவில் மாநகராட்சியில் 2.80 லட்சம் போ் வசிக்கின்றனா். ஏற்கனவே மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மேலும் ஊராட்சிகளை இணைக்கும்போது, மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.

குறிப்பாக வீட்டு வரி, குடிநீா் கட்டணம் ஆகியவை அதிகரிக்கும். புதிதாக வீடு, புதிய கட்டடம் கட்டுவதற்குரிய கட்டணம் பல மடங்கு உயரும். இதற்கான அனுமதி பெறுவதற்கு மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே மக்கள் நலன் கருதி புதிதாக ஊராட்சி பகுதிகளை நாகா்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.