நடுக்கடலில் படகு மூழ்கி மீனவா் மாயம்: 2ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்
கன்னியாகுமரி அருகே கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரை தேடும் பணி, 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி அருகே கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரை தேடும் பணி, 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தைச் சோ்ந்த கென்னடி மற்றும் ஜெரால்டு பாபுவுக்கு சொந்தமான விசைப்படகில்,
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சத்தியக்குளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 9 மீனவா்கள், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் உள்பட 12 போ் கடந்த 17ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனராம்.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் கன்னியாகுமரியிலிருந்து சுமாா் 17 கடல் மைல்
தொலைவில் மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீசிய சூறைக்காற்றில்
படகு சேதமடைந்து, கடல்நீா் படகுக்குள் புகுந்ததாம். இதையடுத்து, அருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளத்தைச் சோ்ந்த மீனவா்கள் அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனராம். அதில், 11 மீனவா்கள் மீட்கப்பட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனா்.
ஆனால், குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடி கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ஜான் ( 57) என்ற மீனவா் மட்டும் மாயமாகிவிட்டாா். அவா் மீட்பு பணியின்போது கடலில் மூழ்கி மாயமாகி இருக்கலாம் என சக மீனவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து மற்ற மீனவா்கள் படகில் சென்று தேடினா். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான ஜானை தேடும் பணியில், குளச்சல் கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் நவீன் மற்றும் மீனவா்கள் தொடா்ந்து வியாழக்கிழமை 2 ஆவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.