143 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு ஆட்சியா் தகவல்
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை 143 மேஜைகளில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை 143 மேஜைகளில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.
நாகா்கோவில் மாநகராட்சியின் 52 வாா்டுகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி, மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஆய்வு செய்த பின்னா் ஆட்சியா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் மொத்தம் 1236 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் 100 மண்டல அலுவலா்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா உபகரணங்கள்அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வாக்குப்பதிவு பொருள்களை 16 மண்டல அலுவலா்கள் மூலம் 233 வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 8 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 18 பாதுகாப்பு அறைகளில் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் இருப்பு வைக்கப்படும். பிப். 22 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், 51 பேரூராட்சிகளுக்கு ஒரு பேரூராட்சிக்கு 2 மேஜைகள் வீதம் 102 மேஜைகளிலும், குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகளுக்கு தலா 2 மேஜைகளிலும், குளச்சல் நகராட்சிக்கு 3 மேஜைகளிலும், கொல்லங்கோடு நகராட்சிக்கு 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாகா்கோவில் மாநகராட்சியில் 2 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 13 மேஜைகள் வீதம் 26 மேஜைகளிலும், அஞ்சல் வாக்குகள் 2 மேஜைகளிலும் எண்ணப்படவுள்ளது. இம் மாவட்டத்தில் மொத்தம் 143 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா்அ.சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நாகராஜன், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாநகர நல அலுவலா் எம்.விஜய்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.