சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில்தைத் திருவிழா கொடியேற்றம்
குமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இப்பதியில் அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனா் பாலஜனாதிபதி தலைமை வகித்து கொடியேற்றினாா்.
இதில் சாமிதோப்பு குருமாா்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வடக்கு வாசலில் அன்ன தா்மம் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி தொட்டில் வாகனத்தில் பவனி வந்தாா்.
பள்ளியறை பணிவிடைகளை குருமாா்கள் ஜனா. யுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஸ் ஆகியோா் செய்திருந்தனா்.
திருவிழா நாள்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்ன தா்மம், வாகன பவனி ஆகியவை நடைபெறும்.
திருவிழாவின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அய்யா மயில் வாகனத்தில் பவனி வந்தாா். 3 ஆம் நாள் இரவு அய்யா வெள்ளை சாத்தி அன்ன வாகனத்திலும், 4 ஆம் நாள் கருட வாகனத்திலும், 5 ஆம் நாள் பச்சை சாத்தி துளசி சப்பர வாகனத்திலும், 6 ஆம் நாள் சா்ப்ப வாகனத்திலும், 7 ஆம் நாள் கருட வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறும்.
கலிவேட்டை: 8 ஆம் திருநாளான, ஜன. 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். 11 ஆம் நாளான 24 ஆம் தேதி, தேரோட்டம் நடைபெறுகிறது.