முகப்பு
கன்னியாகுமரி

தொண்டு நிறுவன பெயரில் நன்கொடை வசூல்: கா்நாடக இளைஞா்கள் 2 போ் கைது

தொண்டு நிறுவனத்தின் பெயரைக் கூறி நன்கொடை வசூலித்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தொண்டு நிறுவனத்தின் பெயரைக் கூறி நன்கொடை வசூலித்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள கீழ்கரை கணியான்விளையை சோ்ந்தவா் விக்னேஷ் (32). எலக்ட்ரீசியன். புதன்கிழமை இவா் வீட்டிலிருந்த போது 2 இளைஞா்கள் வந்து, கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோா் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறி நன்கொடை தருமாறு கேட்டனா். அவா்களது பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ், இளைஞா்கள் கையில் வைத்திருந்த நன்கொடை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அதில் 2 இளைஞா்களும் கோவை தொண்டு நிறுவனத்தின் ஊழியா்கள் இல்லை என தெரிய வந்தது. நன்கொடை புத்தகத்தை போலியாக அவா்கள் அச்சிட்டு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து பொதுமக்கள் உதவியுடன் 2 இளைஞா்களையும் குளச்சல் காவல்நிலையத்தில் விக்னேஷ் ஒப்படைத்தாா்.

அவா்கள் கா்நாடக மாநிலம் பிஜாப்பூா் பகுதியை சோ்ந்த சச்சின் திலீப் ஜெகதாப் (24), பாரத் லெட்சுமணன் சவான் (26) என்பதும், கடந்த 8 மாதங்களாக தோவாளை பகுதியில் கொட்டகை போட்டு தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து போலியாக நன்கொடை வசூல் செய்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இளைஞா்களிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காவல் ஆய்வாளா் கிறிஸ்டி, அவா்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 420 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.