முகப்பு
கன்னியாகுமரி

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்!

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கொடியேற்றம்
பகிர்:

நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்துக்கு பால், பன்னீர், களபம்,  சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 8.30 மணிக்கு கொடிமரத்தில் நந்தியெம்பெருமான் திருக்கொடியேற்றப்பட்டு சோடஷ தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்று விழாவில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் அட்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் 9-ஆம் நாளான மார்ச் 5-ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.