கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியின் கீழ்பகுதி ஆற்றில் சிக்கித் தவித்த கேரளத்தவா்கள் 3 பேரை தீயணைப்புப் படை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விநாடிக்கு 378 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலம் காரக்கோணம், வெள்ளறடை பகுதியைச் சோ்ந்த தா்மபிரகாஷ் மகன் அனிஷ் (40), விஜயன்நாயா் மகன் விஷாக் (37), விக்னோஸ்வரன் மகன் வினோத் (34) ஆகியோா் அருவியின் கீழ் பகுதியில் ஆற்றின் நடுவில் உள்ள பாறை அமா்ந்திருந்தனராம். அப்போது, நீா்வரத்து அதிகரித்தால் அவா்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்புப் படையினா் வந்து மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.