கன்னியாகுமரி கடலில் விவேகானந்தா் பாறை - திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவா் சிலை, கடந்த 1.1.2000இல் அப்போதைய முதல்வா் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தமிழக அரசின் சாா்பில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க திங்கள்கிழமை பிற்பகலில் கன்னியாகுமரிக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், மாலை 4.50 மணிக்கு தனிப்படகு மூலம் திருவள்ளுவா் சிலைக்கு சென்றாா். பின்னா், திருவள்ளுவா் சிலைக்கு ‘பேரறிவு சிலை’ என்ற பெயா் சூட்டி, அதற்கான கல்வெட்டை முதல்வா் திறந்து வைத்தாா். தொடா்ந்து திருவள்ளுவா் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்து, பாலத்தின் மறுமுனை வரை நடந்து சென்றாா்.
இதைத் தொடா்ந்து, திருவள்ளுவா் சிலையின் பாதங்களில் மலா் தூவி முதல்வா் அஞ்சலி செலுத்தினாா். அதற்கு பிறகு சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள லேசா் ஒளிவிளக்கு மற்றும் விடியோ படக்காட்சியை பாா்வையிட்டாா். திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளா்களுக்கு சிறப்பு பரிசுகளை முதல்வா் வழங்கினாா்.
பின்னா் அங்கிருந்து கரைக்கு திரும்பிய முதல்வா், விழா மேடைக்கு சென்று சுகி சிவம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்து கொண்டாா்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்: டிச.31 ஆம் தேதி, 2 ஆம் நாள் விழா நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு, திருக்குறள் சாா்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறாா். இதில், தலைமைச் செயலாளா் ந.முருகானந்தம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். இதைத் தொடா்ந்து நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது
பாலம் திறப்பு விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் துரைமுருகன், முத்துசாமி, சேகா்பாபு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, டி.ஆா்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆா்.பாலு, ஆ.ராசா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சா்கள் மனோதங்கராஜ், சுரேஷ்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.