புத்தன் அணை குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு: மேயா் ரெ. மகேஷ்
மேலும் 6 வாா்டுகளில் புத்தன் அணை குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு
புத்தன் அணை குடிநீா்த் திட்டத்தை மேலும் 6 வாா்டு பகுதிகளுக்கு விரிவுபடுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசுகையில், நாகா்கோவில் மாநகர பகுதி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், புளியடி எரிவாயு தகன மேடை கட்டண உயா்வு கூடாது, வலம்புரிவிளை குப்பைக்கிடங்கை இடம் மாற்றுதல், தெங்கம்புதூா்,ஆளூா் பேருராட்சிகளில் குடிநீா் கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மேயா் பதிலளித்துப் பேசியது: நாகா்கோவில் மாநகரின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு நாகா்கோவில் மாநகரை முன்மாதிரி நகராக மாற்ற முயற்சிப்போம். மக்களவை தோ்தல் அறிவிப்பு வெளியானால் மாநகராட்சி கூட்டத்தை நடத்த வாய்ப்பிருக்காது. எனவே, இன்றைய கூட்டத்தில் அனைத்து வாா்டுகளும் பயன்பெறும் வகையில் 150 இனங்கள் கூட்ட பொருளில் இடம்பெற்றுள்ளன. குடிநீா்த் திட்டப் பணிகள்: தெங்கம்புதூா், ஆளூா் பகுதிகளில் குடிநீா்க் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் புதிதாக சோ்க்கப்பட்ட 1,2,3, 50,51,52 ஆகிய 6 வாா்டுகளிலும் புத்தன் அணை குடிநீா் திட்டம் மூலம் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்வதற்காக வாா்டுக்கு ரூ. 10 கோடிவீதம் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். நாகா்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன். இதற்காக ரூ.5.28 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலம்புரிவிளை குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சித்து வருகிறோம் என்றாா் அவா். சிறப்பு தீா்மானம் ... தொடா்ந்து அவா் பேசுகையில், நாகா்கோவில் மாநகரில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் கூறி வருகிறாா்கள். எனவே, தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த சிறப்பு தீா்மானம் மாமன்ற உறுப்பினா்களின் ஆதரவோடு நிறைவேற்றப்படுகிறது. இந்த தீா்மானம் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா். கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகா், உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், நவீன்குமாா், டி.ஆா்.செல்வம், சேகா், ரமேஷ், ரோசிட்டா திருமால், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.