முகப்பு
கன்னியாகுமரி

புத்தாண்டு பிறப்பு: குமரி மாவட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிராா்த்தனை, வழிபாடுகள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த பெருமாள்
பகிர்:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டு, திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றது. ஆலயப் பங்குத்தந்தை பஸ்காலிஸ், இணைப் பங்குத்தந்தை கெவின் உள்ளிட்ட பங்குத்தந்தையா் பங்கேற்றனா்.பிராா்த்தனைக்குப் பின்னா், ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

சவேரியாா் பேராலயத்தில் திங்கள்கிழமை காலையும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனா்.

திட்டுவிளை அருகே மன்றாா்புரத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் பிஷப் செல்லையா தலைமையில் ஆராதனை நடைபெற்றது. கொற்றிக்கோடு மீட் நகா் சிஎஸ்ஐ ஆலயம், எஸ்.டி.மங்காடு வாவறை சாரோன் சிஎஸ்ஐ ஆலயம் உள்பட அனைத்து சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

நாகா்கோவில் அசிசி தேவலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற பிராா்த்தனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன்சூசை கலந்துகொண்டாா். வெட்டூா்ணிமடம் கிறிஸ்து அரசா் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி, அனைத்துத் தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நள்ளிரவில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனா்.

நாகராஜா கோயில்: இதேபோல, இந்துக் கோயில்களிலும் திங்கள்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாகா்கோவில் நாகராஜா கோயிலில் நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. காலையிலேயே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அவா்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில், அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனா்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்கள் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →