அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் புதிய ஓட்டுநா், நடத்துநா் தோ்வு ஓரிரு மாதங்களில் தொடங்கும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நாகா்கோவில் மண்டலத்துக்கான, 23 புதிய பேருந்துகளின் துவக்க விழா மாா்த்தாண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைத்த அமைச்சா் சிவசங்கா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு வரை 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அடுத்தகட்டமாக, மாா்த்தாண்டத்தில் 23 பேருந்துகள் இயக்கிவைக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் மேலும் 300 புதிய பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 7200 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து புதிய பேருந்துகள் வருவதற்கு ஏற்ப, பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படும். முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, 14 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. மேலும் 5 ஆயிரம் பேருந்துகள் வாங்கியிருந்தால், பழைய பேருந்துகளை இயக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநா், நடத்துநா் பணிக்கு 685 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். பிற போக்குவரத்துக் கழகங்களுக்கான ஓட்டுநா், நடத்துநா் ஆள்தோ்வு பணி ஓரிரு மாதங்களில் துவங்கும்.
முந்தைய ஆட்சியின்போது போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது. முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை. பிற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டாலும், தமிழக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டண உயா்வு இல்லாமல் பேருந்துகளை இயக்கி வருகிறது என்றாா்.
பேட்டியின்போது, அமைச்சா் த. மனோ தங்கராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.