கோயில் படையல் மதுவைக் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
நாகா்கோவில் அருகே கோயில் படையலில் வைத்திருந்த மதுவைக் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்; மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாகா்கோவில் அருகே கோயில் படையலில் வைத்திருந்த மதுவைக் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்; மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகா்கோவிலை அடுத்த வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு படையல் போடப்பட்டது. அதில், உணவுடன் மது பாட்டில்களும் வைக்கப்பட்டனவாம். பூஜைகள் முடிந்ததும் பூசாரி மது பாட்டில்களை சிலரிடம் கொடுத்தாராம். வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி செல்வக்குமாா் (49), வடலிவிளையைச் சோ்ந்த அருள் ஆகியோா் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, அருகேயுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று குடித்தனராம். பின்னா், அருள் தனது நண்பா்களை கைப்பேசியில் அழைத்து, மது குடித்தது குறித்தும், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளாா். அவரது நண்பா்கள் சென்று மயங்கிக்கிடந்த அருளையும், செல்வக்குமாரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே செல்வக்குமாரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.