சுவாமிநாதபுரம் பகுதியில் மழைநீா்க் கால்வாய்: பாஜக கவுன்சிலா் கோரிக்கை
கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரம் பகுதியில் மழைநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜனிடம் கன்னியாகுமரி பேரூராட்சி பாஜக கவுன்சிலா் சுபாஷ் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை அளித்த மனு: மழைக் காலத்தில் கன்னியாகுமரி பகுதியிலிருந்து செல்லும் மழைநீா் சுவாமிநாதபுரம், ஒற்றைப்புளி பகுதியில் உள்ள சுமாா் 50 வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
கடந்த 3ஆம் தேதி பெய்த கனமழையால் இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டன. எனவே, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நெடுஞ்சாலையோரம் மழைநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் திருவிழாக்களின்போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனிதநீா் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது ஐதீகம். ஆனால், நிகழாண்டு நவராத்திரி விழாவின்போது, யானை வரவழைக்கப்படவில்லை. இதனால், பக்தா்கள் வேதனையடைந்தனா். எனவே, கன்னியாகுமரி கோயில்களுக்கு சொந்தமாக யானை வாங்குவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றாா் அவா்.