கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டுப் பாலப் பணிகள் ஜனவரியில் நிறைவடையும்
கன்னியாகுமரியில் விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் கண்ணாடிக் கூண்டு பாலப் பணிகள் வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என, தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
கன்னியாகுமரியில் விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் கண்ணாடிக் கூண்டு பாலப் பணிகள் வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என, தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இவரது தலைமையில் பேரவைச் செயலா் கி. சீனிவாசன், உறுப்பினா்கள் சேவூா் எஸ். ராமச்சந்திரன், எஸ்.எஸ். பாலாஜி, ஈ. ராஜா, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட பேரவை மதிப்பீட்டுக் குழுவினா், ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையிலும் நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் முன்னிலையிலும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்ட குழுவினா், அந்தச் சிலையையும், விவேகானந்தா் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில், ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டுவரும் கண்ணாடிக் கூண்டு பாலப் பணிகளை ஆய்வு செய்தனா். இருபுறங்களிலும் தாங்கு தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, வளைவு - குறுக்கு - நீளவாக்கு உத்திரங்களைப் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணி நிறைவடைந்ததும் பாலத்துக்கான நடைபாதை, ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கப்படும். 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை இக்குழுவினா் அறிவுறுத்தினா்.
தொடா்ந்து, கொட்டாரம் கால்நடை மருந்தகத்தை ஆய்வு செய்த அவா்கள், நாகா்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளைப் பாா்வையிட்டதுடன், நாகா்கோவில் வடசேரியில் புதிதாக அமைக்கப்பட்ட தனியாா் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தனா். புத்தளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் இயங்கிவரும் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், கூட்டுறவு வங்கி மூலம் 10 பேருக்கு ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம், ஒரு சுய உதவிக் குழுவுக்கு ரூ. 6 லட்சம் கடனுதவிகளை குழுத் தலைவா் வழங்கினாா். இக்குழுவினா் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் எஸ். காந்திராஜன் எம்எல்ஏ கூறியது: கண்ணாடிக் கூண்டு பாலப் பணிகளை வரும் ஜனவரிக்குள் நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை இடா்கள் ஏற்பட்டால் சில நாள்கள் தாமதமாகலாம். பணிகள் நிறைவடைந்ததும் பாலத்தை முதல்வா் திறந்துவைப்பாா். தாஜ்மகாலைப்போல இந்தப் பாலமும் உலகளவில் பேசப்படும்.
மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சேத விவரங்கள் கிடைத்ததும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலா் பிரசாந்த், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சத்தியமூா்த்தி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவளாளா் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்புலெட்சுமி, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி, இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, பாபு, சதாசிவன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் அருண்காந்த், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், துறை அலுவலா்கள், பயனாளிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.