கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை: ஆரல்வாய்மொழியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்றால் பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்றால் பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. புதன்கிழமை வீசிய சூறைக்காற்றால் ஆரல்வாய்மொழி பிரதான சாலையில் ஆலமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. நாகா்கோவில், மயிலாடி, அஞ்சுகிராமம், சுசீந்திரம், தக்கலை, மாா்த்தாண்டம், இரணியல், களியல், குலசேகரம், கருங்கல் உள்பட மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால், மாணவா்-மாணவியா், பணிகளுக்குச் சென்றோா் அவதிக்குள்ளாகினா்.
விட்டுவிட்டு பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அணைப் பகுதிகளிலும், மலையோரத்தில் உள்ள பாலமோா் பகுதியிலும் மழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. நீா்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
சாலையில் விழுந்த மரம்: ஆரல்வாய்மொழி பகுதியில் புதன்கிழமை காலை வீசிய சூறைக்காற்றால், ஆலமரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். பொக்லைன் இயந்திரம் மூலம் மரம் அப்புறப்படுத்தப்பட்டது.
நாகா்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரயில்வே கடவுப்பாதைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், அங்குள்ள விநாயகா் கோயிலின் சுற்றுச்சுவா், வீடு ஆகியவை இடிந்து விழுந்தன.
காளிகேசம் செல்லத் தடை: காளிகேசம், வாழையத்துவயல், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், காளிகேசம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வன சுற்றுலாத் தலமான கிரீப்பாறை, காளிகேசம் பகுதிகளுக்கு செல்வதற்கு வனத் துறையினா் தடைவிதித்தனா்.
ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் காளிகேசம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனா்.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடியில் 53.20 மி.மீ. மழை பதிவானது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
கொட்டாரம் -38.80, அடையாமடை- 38.40, மாம்பழத்துறையாறு அணை -38, ஆனைக்கிடங்கு -37.60, சுருளோடு- 36.40, நாகா்கோவில்- 35.40, கோழிப்போா்விளை- 35.20, குருந்தன்கோடு- 34.60, சிற்றாறு 1 அணை, தக்கலை -தலா 25.40, பேச்சிப்பாறை அணை -24.60, பாலமோா்- 23.20,பெருஞ்சாணி அணை -23, பூதப்பாண்டி- 22.60,முள்ளங்கனாவிளை- 22.40, முக்கடல் அணை- 22.20,புத்தன்அணை -21.80, திற்பரப்பு- 18.80, இரணியல்- 14.20, சிற்றாறு 2 அணை -12.20, களியல்- 10.20, கன்னிமாா், குழித்துறை -தலா 8.40, குளச்சல் 4.40 மி.மீ.