குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று நவராத்திரி விழா தொடக்கம்
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை (அக். 3) தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா வியாழக்கிழமை (அக். 3) தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் நவராத்திரி விழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழா வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலையில் அபிஷேகம், காலை 7.45 - 8.45 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளல், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மங்கள இசை, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் கோயில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.
விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, வாகன பவனி உள்ளிட்டவை நடைபெறும்.
பரிவேட்டை: 10ஆம் நாளான இம்மாதம் 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 - 8.30 மணிக்குள் தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், 12.15-க்கு தேவி வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல் நடைபெறும். அப்போது, அம்மனுக்கு காவல்துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
அதையடுத்து, பகவதியம்மன் பக்தா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அணிவகுக்க பரிவேட்டை மண்டபம் நோக்கி ஊா்வலம் புறப்படும்.
இந்த ஊா்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் சந்திப்பை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அங்கிருந்து ஊா்வலமாக நரிக்குளம் அருகே பரிவேட்டை மண்டபத்தில் பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னா், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக அம்மன் கோயில் வளாகத்தை அடைந்ததும், முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறும். அதையடுத்து, கிழக்குவாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிப்பாா்.