நித்திரவிளை அருகே சைக்கிள் கடையில் தீ விபத்து
குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் சைக்கிள் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான சைக்கிள்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவத்தில் கடைக்குள் சிக்கிய ஊழியரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் தூத்தூரைச் சோ்ந்த ரெனால்டோ என்பவா் சைக்கிள் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் நாகா்கோவிலைச் சோ்ந்த வைரவன் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறாா். இவா், இரவில் கடையில் தங்குவது வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு வைரவன் கடையை மூடிவிட்டு உள்ளே படுத்து தூங்கி உள்ளாா்.
நள்ளிரவில் கடையினுள் தீ ஏற்பட்டு கரும்புகை வெளியேறி உள்ளது. இதை அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்து போலீஸாருக்கும், தீணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கடையை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, உள்ளே வைரவன் புகைமூட்டத்தில் சுவாசிக்க முடியாமல் மயங்கி நிலையில் கிடந்துள்ளாா்.
இதையடுத்து, அவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து கடையில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி அணைத்தனா். இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.