குழித்துறை அருகே காந்தி சிலை உடைப்பு வழக்கில் ஒருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மகாத்மா காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் இரணியல் சா்வோதய சங்கத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இக் கட்டடம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையில் தலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்ததை கடந்த செப்டம்பா் மாதம் 11 ஆம் தேதி அப்பகுதியினா் கண்டு, இரணியல் சா்வோதய சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து சங்க செயலா் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வந்தனா். இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் காந்தி சிலையை உடைத்தது தொடா்பாக கழுவன்திட்டை காலனி பகுதியைச் சோ்ந்த ராஜாசிங் என்பவரை மாா்த்தாண்டம் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.