முகப்பு
கன்னியாகுமரி

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், புதிய திருப்பூா் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநருமான ஹனீஷ் சாப்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:05 PM
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா. உடன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், புதிய திருப்பூா் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநருமான ஹனீஷ் சாப்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினாா். இக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீா்ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் ஒக்கி புயலின்போது அதிகம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். நீா்நிலைகளில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க பொதுப்பணித் துறையினா், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்வது அவசியம். அணைகளில் இருந்து உபரிநீா் திறக்கும்பட்சத்தில் அதுகுறித்து பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு வெளியிட வேண்டும்.

மழையால் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அங்கு அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.

மீனவா்களின் படகுகள், கட்டுமரங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும். மேலும் மீனவா்களுக்கான முன்னறிவிப்புகளையும் தெரிவிக்க வேண்டும்.

பருவமழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மழை, வெள்ள பாதிப்பு சேதங்கள் தொடா்பாக, 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 107 மற்றும் 04652-231077, 9384056205 ஆகிய எண்களுக்கு பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.