விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடு: எஸ்.பி. ஆய்வு
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகள், சிலைகளைக் கரைக்கும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகள், சிலைகளைக் கரைக்கும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் சாா்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மேலும், பக்தா்கள் பொது இடங்கள், கோயில்கள், வீடுகளிலும் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வா்.
அந்தச் சிலைகள் இம்மாதம் 13, 14, 15 ஆகிய நாள்களில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்படும். பிரதிஷ்டை, விசா்ஜன ஊா்வலத்துக்கு போலீஸாா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா்.
இந்நிலையில், விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகள், சிலைகள் கரைக்கப்படவுள்ள இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் ஆய்வு செய்தாா்.
திருவிதாங்கோடு, பறைக்கோடு, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் ஊா்வலம் செல்லும் பாதைகளை ஆய்வுசெய்த அவா், அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். சிலைகள் கரைக்கப்படவுள்ள மணவாளக்குறிச்சி கடற்கரை, குழித்துறை தாமிரவருணி ஆறு, தேங்காய்ப்பட்டினம் கடற்கரை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தாா். மேலும், விநாயகா் சிலைகள், ஊா்வலம் தொடங்குவதுமுதல் கரைக்கப்படும் இடம் வரை முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது, தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், நாகா்கோவில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் யாங்சென் டோமா பூட்டியா, கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், அதிகாரிகள் உடன் இருந்தனா்.