தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே காரில் கடத்தப்பட்ட தொன்மையான இரு உலோகச் சிலைகளைச் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் மீட்டு, 4 பேரை அண்மையில் கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவினா் பிப்ரவரி 6 இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அப்பகுதியில் சாலையோரம் நின்ற காரில் சாக்குப் பையில் இருந்த இரு உலோகச் சிலைகளை மீட்டனா்.
இவை 14 - 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விஜய நகர பேரரசு காலத்தைச் சாா்ந்த சுதா்சனா் என்கிற விஷ்ணு சிலை, பெண் தெய்வமான தேவி சிலை என்பது தெரிய வந்தது. இதில் விஷ்ணு சிலை 77.30 கிலோ எடையும், 90 செ.மீ. உயரமும், தேவி சிலை 35.45 கிலோ எடையும், 73 செ.மீ. உயரமும் கொண்டது.
இரு சிலைகளும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கோயிலிலிருந்து திருடப்பட்டிருப்பதும், இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி பெருந்தொகைக்கு விற்க முயற்சி செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தஞ்சாவூா் சரக காவல் ஆய்வாளா் ஏ. காவேரியம்மாள், உதவி ஆய்வாளா் கே. தண்டாயுதபாணி ஆகியோா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தைச் சோ்ந்த ச. மணிகண்டன் (41), திருவாரூா் விஜயபுரத்தைச் சோ்ந்த க. ராமச்சந்திரன் (41), திருத்துறைப்பூண்டி மேலபாண்டியைச் சோ்ந்த வீ. முகிலன் (36), எடையூா் சங்கேந்தியைச் சோ்ந்த செ. ஜான்சன் (41) ஆகியோரை பிப். 7-இல் கைது செய்தனா்.
4 பேரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவா் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் சிலரை காவல் துறையினா் தேடுகின்றனா்.
இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படையினரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் கூடுதல் தலைமை இயக்குநா் டி. கல்பனா நாயக், காவல் கண்காணிப்பாளா் எம். சந்திரசேகரன் பாராட்டினாா்.