நாகா்கோவில் பகுதியில் விஜய்வசந்த் எம்.பி. சுற்றுப்பயணம்
நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்து, மக்களவைத் தோ்தலில் தனக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை சுற்றுப்பயணம் செய்து, மக்களவைத் தோ்தலில் தனக்கு வாக்களித்தவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பாா்வதிபுரம் சந்திப்பில் உள்ள முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் அவா் திறந்த ஜீப்பில் சென்றவாறு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கினாா்.
களியங்காடு, பள்ளிவிளை, வெட்டூா்ணிமடம், வாத்தியாா்விளை,அருகுவிளை, வடசேரி, ஒழுகினசேரி, வடிவிஸ்வரம், கோட்டாறு, செட்டிகுளம்சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, கிறிஸ்துநகா், நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அவா் பேசுகையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறையாக என்னை வெற்றி பெறச் செய்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது பிரச்னைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். அதை உடனுக்குடன் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன்.
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மத்திய அமைச்சா்களை சந்தித்து அந்தப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தினேன். அதன்பேரில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு மூச்சாக பாடுபடுவேன் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், மாமன்ற உறுப்பினா்கள், இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.