முகப்பு
கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா அக்.3 இல் தொடங்குகிறது

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா அக். 3 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:40 PM
கன்னியாகுமரி பகவதியம்மன்.
பகிர்:

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழா அக். 3 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நிகழாண்டு நவராத்திரி திருவிழா அக். 3ஆம் தேதி தொடங்குகிறது.

முதல்நாள் திருவிழாவான 3ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 7.45 மணிக்கு மேல் காலை 8.45 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளல், காலை 8 மணிக்கு பஜனை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

விழா நாள்களில் அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

பரிவேட்டை: 10ஆம் நாள் திருவிழாவான அக்டோபா் 12ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தல், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், நண்பகல் 12.15 மணிக்கு தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படுதல் நடைபெறும். அப்போது, அம்மனுக்கு காவல்துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.

இத்தொடா்ந்து பகவதியம்மன் பக்தா்கள் சங்கம் சாா்பில் முத்துக்குடை, யானை, குதிரை, சிங்காரி மேளம், தையம் ஆட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் அணிவகுக்க திரளான மாபெரும் ஊா்வலம் பரிவேட்டை மண்டபம் நோக்கி புறப்படும். ஊா்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் சந்திப்பை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அங்கிருந்து ஊா்வலமாக நரிக்குளம் அருகேயுள்ள பரிவேட்டை மண்டபத்தில் பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெறும். இதையடுத்து, மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக அம்மன் கோயிலை நோக்கி செல்வாா். அப்போது முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இதையடுத்து கோயில் கிழக்குவாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏற்பாடுகளை, குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் நா.பழனிகுமாா், அறங்காவலா் குழுத்தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், பகவதியம்மன் கோயில் மேலாளா் ச.ஆனந்த், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், எஸ்.கே.ஜோதீஸ்குமாா், வி.சுந்தரி, ஓ.எஸ்.துளசிதரன் நாயா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.