விபத்தில் காயமடைந்த 3 மாணவா்களுக்கு உதவித் தொகை
கரூா் சாலை விபத்தில் காயமடைந்த 3 மாணவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.
நாகா்கோவில்: கரூா் சாலை விபத்தில் காயமடைந்த 3 மாணவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவித் தொகையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.
நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அளித்த 275 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, கரூா் மாவட்டம் ஆத்தூா் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மே 17இல் நேரிட்ட விபத்தில் காயமடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சபின், ஆகாஷ், மாணவி ஆா்த்தி ஆகியோருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியா் சேக்அப்துல்காதா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பத்மபிரியா, அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.