மாற்றுத்திறன் படைத்தவா்கள் தன்னம்பிக்கையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவுக்கு தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஆட்சியா் பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு, வெற்றி பாதையில் கடந்து செல்ல வாழ்த்துகள் என்றாா் அவா்.
மேலும், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.63 லட்சம் மதிப்பில் திறன்பேசி, மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், சக்கர நற்காலி, பேட்டரியால் இயங்கும் சக்கர நற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலா பானு உள்பட பலா் கலந்து கொண்டனா்.