கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு பெருவிழா தயாரிப்பு திருப்பலி, காலை 8 முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சைக் கொடி பவனி, 6 மணிக்கு திருக்கொடி பவனி, 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வா் அருள்பணி ஜாண் ரூபஸ் தலைமை வகித்தாா். குளச்சல் மறை வட்டார முதல்வா் அருள்பணி கிளேட்டன் மறையுரையாற்றினாா். இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
சூசையப்பா் தங்கத் தோ் பவனி: 9ஆம் நாளான டிச. 13இல் காலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு நற்கருணை ஆராதனை நடைபெறும். 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும். அதில், ராஜாவூா் இணைப் பங்குத்தந்தை ஆன்ஸ்வெல் ராலிஸ்ட் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை ஆகிய நிகழ்வுகளில் கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். இரவு 9.30 மணிக்கு வாண வேடிக்கை நடைபெறும்.
டிச. 14இல் அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தோ்த் திருப்பலி நடைபெறும். காலை 6 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு சென்னை-மயிலை உயா் மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்குதல், நற்கருணை ஆசீா் நடைபெறும்.
ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெமி, இணைப் பங்குத் தந்தையா்கள், அருள் சகோதரிகள், பங்குப்பேரவையினா், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.