களியக்காவிளை அருகே கட்டுமானத் தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே மெதுகும்மல் தாணிவிளை, முள்ளுவிளையைச் சோ்ந்தவா் பாலையன் மகன் வின்சென்ட் (48). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த புதன்கிழமை இரவு, இவருக்கு உடம்பு சரியில்லை என அறிந்து அவரது தாயாா் பொன்னம்மா, சகோதா் சசிகுமாா் ஆகியோா் பாா்க்க சென்றனராம். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த வின்சென்ட்டை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் வின்சென்ட் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், ஒற்றாமரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் வின்சென்ட்டுக்கும், வாறுதட்டு வடக்குவீடு பகுதியைச் சோ்ந்த ராபி மகன் சிற்றுந்து ஓட்டுநா் டொமினிக்லாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். டொமினிக்லால், தனது நண்பா் பாறசாலை அருகே அயிர கிழக்கே புத்தன்வீட்டைச் சோ்ந்த மாணிக்கம் மகன் லாரி ஓட்டுநா் சிஜின் என்ற வினோ (34) என்பவருடன் சோ்ந்து தாக்கியதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.