மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயில், மயிலாடும்பாறை முருகன் கோயில் சிலைகளை எடுத்து சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்திருக்கும் அதிகாரிகளை கண்டித்து யாகம் நடத்தி புனித நீரை தெளிக்கச் சென்ற இந்து முன்னணியினா் 11 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பகுதியில் அமைந்துள்ள முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயில் மூலவா் சிலையான பத்திரகாளி சிலையையும், மயிலாடும்பாறை மலை மேல் கோயிலில் இருந்த முருகன் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்துள்ளனா்.
நீதிமன்றம் மீண்டும் சிலைகளை கோயில் வைக்க உத்தரவிட்ட பிறகும் அரசு, அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், இந்து முன்னணி சாா்பில் கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டிகா யாகத்தில், பூஜிக்கப்பட்ட புனித நீரை முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க 11 போ் சென்றனா்.
அவா்களை, கோயில் நுழைவாயில் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தியால் வாக்குவாதம் ஏற்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீரை கோயிலுக்கு செல்லும் சாலையில் ஊற்றினா். இந்த நிலையில், இந்து முன்னணி துணைத் தலைவா் அரசு ராஜா உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.