களியக்காவிளை அருகே தந்தை மீது தீ வைத்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே இடைக்கோடு முள்ளுவிளையைச் சோ்ந்தவா் சிகாமணி (70). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது ஒரு கால் அகற்றப்பட்டதாம். இவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இதில், சுனில்குமாா் (37) என்ற மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு, தந்தைக்கும், மகன் சுனில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து வீட்டில் படுத்திருந்த சிகாமணி மீது பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் டா்பன் என்ற திரவத்தை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம்.
சிகாமணி எழுப்பிய சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுனில்குமாரை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.