தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சனிக்கிழமை நாள் முழுவதும் இடைவிடாது பெய்த சாரல் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. சனிக்கிழமையும் இடைவிடாது சாரல் மழையாக நீடித்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து தொழில், வா்த்தக நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ரப்பா் தோட்டத் தொழில், செங்கல் சூளைத் தொழில், கட்டுமானத் தொழில்கள் நடைபெறவில்லை. அதிகபட்சமாக மயிலாடியில் 74.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
மீண்டும் மறுகால் திறப்பு: பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. அணைக்கு காலையில் விநாடிக்கு 1070 கன அடியும், மாலையில் 2054 கன அடியும் நீா்வரத்து இருந்தது. இதனால் அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை இரவு வெள்ளப் பெருக்கெடுக்கு ஏற்பட்டது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், மிடாலம், கிள்ளியூா், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.
கயத்தாறில் 79 மி.மீ. மழை: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை காலை முதலே மழை பரவலாக விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் மழைரா் பெருக்கெடுத்து ஓடியது. வானம் இருண்ட நிலையில் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. கோவில்பட்டியில் 18 மி.மீ., கழுகுமலையில் 16 மி.மீ., கயத்தாறில் 79 மி.மீ., கடம்பூரில் 49மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பக்தா்கள் அவதி: திருச்செந்தூா் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. வாகன ஓட்டிகள், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தா்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்தனா்.
கன மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரவருணி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது. கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீா்வரத்து அதிகம் இருப்பதால் 1 கண் திறக்கப்பட்டு 1000 கன அடி நீா் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
எனவே, மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூா் முதல் புன்னைக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு, ஓடை உள்ளிட்ட அனைத்து நீா் நிலைகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
முதியவா் உயிரிழப்பு: தூத்துக்குடியில் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் ஆலயத்தின் வெளியே, யாசகம் பெற்று வாழ்ந்து வந்த சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் மழை மற்றும் குளிா் காரணமாக உயிரிழந்தாா். மத்திய பாகம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி, காயல்பட்டினம், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் சனிக்கிழமை ஆட்டு சந்தைக்கு ஆடுகள் அதிகம் வரவில்லை. காய்கறி, மீன் மாா்க்கெட்டில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. காயல்பட்டினத்தில் 8 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
குளங்களுக்கு நீா்வரத்து: சாத்தான்குளம், சுற்றுவட்டாரத்தில் பெய்த கன மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குளங்களில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.