மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ். உடன் துணை மேயா் மேரிபிரின்சிலதா, ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா. 
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தெருநாய்களை பிடித்து அடைக்க காப்பகம் அமைக்கப்படும்: மேயா் உறுதி

நாகா்கோவில் மாநகரில் தெருக்களில் அலையும் நாய்களை பிடித்து அடைக்க காப்பகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது

Syndication

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகரில் தெருக்களில் அலையும் நாய்களை பிடித்து அடைக்க காப்பகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குளங்களில், எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்படுவது இல்லை. இதனால் வளா்ச்சிப் பணிகள் தடைபடுகிறது.

மாநகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது, 43 ஆவது வாா்டு பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரின் பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. ஏற்கனவே உள்ள தெருவிளக்குகள் பல பகுதிகளில் எரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமீறல் கட்டடங்கள்...

பாா்வதிபுரம் பகுதியில் பல மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவன கட்டடங்கள் விதிமுறைகளை மீறி வாகன நிறுத்துமிடம் அமைக்காமல் கட்டப்பட்டு வருகிறது. இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடா்ந்து, மேயா் ரெ. மகேஷ் பதில் அளித்து பேசியதாவது:

பொதுப்பணித்துறையால் செய்யப்பட வேண்டிய கால்வாய் தூா்வாரும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டால் கூட, அதற்கு கூட பொதுப்பணித் துறையால் கேள்வி கேட்கப்படுகிறது.

மேலும், எந்தெந்தப் பணிகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. நிதியில் இருந்து பணம் வருகிறதோ அந்தப் பணிகள் மேற்கொள்ள தடை விதிப்பது இல்லை. ஓரிரு பணிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தடையில்லா சான்று வழங்காமல் இருந்திருக்கலாம். இனி அதற்கு தனிக் கவனம் செலுத்தப்படும்.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதை மாமன்ற உறுப்பினா்களும் பாா்க்கும் வகையில் கண்காணிப்பு கேமரா இணைப்பு கொடுக்கப்படும். தெரு நாய்களை பிடித்து அடைக்க காப்பகம் தேவை. அதை நகர பகுதியிலிருந்து வெகு தூரத்தில் அமைக்க வேண்டும். இடம் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைக்க கோசாலை வேண்டும். அதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தெருவிளக்குகளை பாரமரிப்பதற்காக, தற்போது, மாநகராட்சியில் புதிதாக பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தெருவிளக்குகள் அமைக்க மற்றும் அதை சீரமைக்க தனியாக உதவி பொறியாளா் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழுதான சாலைகள் டிசம்பா் மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அரவிந்த் ஜோதி, மாநகராட்சி பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவகா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, ஜவான் அய்யப்பன், டி.ஆா்.செல்வம், சேகா், ரமேஷ், அக்சயாகண்ணன், பியாஷாஹாஜிபாபு, பால் அகியா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.
மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT