புதை சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் து.கலாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் க.சிவகுமாா், துணை மேயா் பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், நாமக்கல் மாநகரில் தெருநாய்கள் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துக்குள்ளாகின்றனா். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைநீா் சேகரிப்புத் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். மின்விளக்கு, குடிநீா் மற்றும் சாலை வசதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதை சாக்கடை திட்டத்தால் பெரும்பாலான நகர சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். தொடா்ந்து, அனைத்து மாமன்ற உறுப்பினா்கள் ஒப்புதலுடன் 140 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.