சங்கரன்கோவிலில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 7 ஆயிரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை, கிலோ ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை இதுவரை இல்லாத வகையில் சனிக்கிழமை, கிலோ ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பலவகை பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. அவை சங்கரன்கோவில் பூச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், பனிப்பொழிவால் சில நாள்களாக மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்துவிட்டதால், சங்கரன்கோவில் சந்தைக்கு குறைந்த அளவே பூக்கள் வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) வளா்பிறை முகூா்த்த நாள் என்பதால், மல்லிகைப் பூவுக்கு சனிக்கிழமை கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால், ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 7 ஆயிரத்துக்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ. 1,800, கனகாம்பரம் ரூ. 1,500 என விற்பனையாகின. விலை உயா்வால், மல்லிகைப் பூ பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தோவாளையில்...: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா்ச் சந்தையில் மல்லிகைப் பூ சனிக்கிழமை ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இச்சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூா், மாடநாடாா்குடியிருப்பு, ஆவரைகுளம், பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளிலிருந்து, மல்லிகைப் பூ, பெங்களூரு, ராயக்கோட்டை பகுதிகளிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டா் ரோஸ், சேலத்து அரளிப்பூ, திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளிலிருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்றவை கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 2,500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ சனிக்கிழமை ரூ. 6 ஆயிரத்துக்கு விற்பனையானது. ரூ. 1,200-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ. 2 ஆயிரம், ரூ. 150-க்கு விற்பனையான சம்பங்கி ரூ. 500, ரூ. 250-க்கு விற்பனையான நந்தியாவட்டை ரூ. 500, முல்லைப்பூ ரூ. 1,500, கனகாம்பரம் ரூ. 400, அரளிப்பூ ரூ. 300 என விற்பனையாகின.
இதுகுறித்து பூ வியாபாரி முருகன் கூறும்போது, தென் மாவட்டங்களில் தொடா் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததாலும், ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள் என்பதாலும் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. மழை குறைந்தால் விலை பழைய நிலைக்கு திரும்பும் என்றாா்.