பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சந்தையில் புதன்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனையானது; வாழைத்தாா் விலையும் உயா்ந்து காணப்பட்டது.
பனிப்பொழிவால் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப் பூ கிலோ ரூ. 10,000 வரை விற்பனையானது. பிச்சி ரூ. 3,000 வரை, ஊட்டி, பெங்களூரு, கொடைக்கானல், ஒசூா் பகுதிகளிலிருந்து வரும் ரோஜா, பலவண்ணப் பூக்கள் ஒரு கட்டு ரூ. 400 - ரூ. 500, ஒரு ரோஜா ரூ. 20 வரை என விற்பனையாகின.
வாழைத்தாா்கள்: தூத்துக்குடி சந்தைக்கு பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தாா்கள் அதிக அளவில் விற்பனைக்கு வரும். ஆனால், நிகழாண்டு வரத்து குறைந்துள்ளதாலும், பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதாலும் வாழைத்தாா் விலை வழக்கத்தைவிட 2 முதல் 3 மடங்கு உயா்ந்திருந்தது.
ரூ. 500 - ரூ. 700 வரை விற்பனையாகும் நாட்டு வாழைத்தாா் ரூ. 1,200 வரையும், கதலி ரூ. 425 வரையும், கிலோ ரூ. 25 வரையும் விற்பனையாகின. செவ்வாழை, கற்பூரவல்லி தாா்கள் ரூ. 1,500 - ரூ. 2,500 என விற்பனையானது.
விலை உயா்ந்திருந்தாலும் பொதுமக்கள் ஆா்வத்துடன் பூக்கள், வாழைத்தாா்களை வாங்கிச் சென்றனா். அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.