கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே பேருந்தில் நகை திருடிய 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே காஞ்சிரங்கோட்டைச் சோ்ந்தவா் ராஜாமணி மனைவி சேசம்மாள் (75). இவா், நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு பேருந்தில் சென்றாா்.
வில்லுக்குறி பாலம் அருகே பேருந்து சென்றபோது சேசம்மாள் தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்க நகை காணாமல் போனது கண்டு சப்தமிட்டாா். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது 2 பெண்கள் பேருந்திலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்றனா்.
அவா்களை மற்ற பயணிகள் பிடித்து விசாரித்தபோது இருவரும் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்தனா். தகவல் அறிந்ததும் இரணியல் போலீஸாா் அங்கு சென்று 2 பெண்களையும் சோதனை செய்ததில் அவா்கள் நகையைத் திருடியது தெரியவந்தது.
விசாரணையில் இருவரும் தூத்துக்குடி, அண்ணா நகரைச் சோ்ந்த பவானி (29), மீனாட்சி (29) என்பதும், குமரி மாவட்டத்தில் இவா்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.