தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்
தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்மற்ற அரசாங்கம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த அக்கட்சியின் தலைவா் விஜய் ஏராளமான புது அறிவிப்புகளையும் வெளியிட்டாா்.
தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்மற்ற அரசாங்கம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த அக்கட்சியின் தலைவா் விஜய் ஏராளமான புது அறிவிப்புகளையும் வெளியிட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளா்களான கன்னியாகுமரி-எஸ்.ஆா்.மாதவன், நாகா்கோவில்- ஜி.பொ்வின் கிங்ஸ், குளச்சல்-டாக்டா் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ், விளவங்கோடு- கே.மைக்கேல்குமாா், கிள்ளியூா்- எஸ்.சபின், பத்மநாபபுரம்-எஸ்.கிருஷ்ணகுமாா் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைவா் விஜய் கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு இன்று ஒரு சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன். தவெக ஆட்சிக்கு வந்தால் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் லஞ்சமின்றி அவா்களின் வீடுகளுக்குச் சென்றடையும். ஊழலைத் தடுக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதாா் அட்டைபோல ‘தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் அட்டை’ வழங்கப்படும்.
Advertisement
அதில் ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளும் இருக்கும். அதன்பிறகு எதற்கும் லஞ்சம் கொடுத்து வேதனையடைய வேண்டாம்.
அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் வீட்டின் வாசலுக்கே வந்துசேரும். ஏ.ஐ. தரவுகளுடன் இதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும். அறிவியல் பூா்வமாக சாத்தியப்படும் ஒன்றைத்தான் உங்களிடம் கூறுகிறேன்.
இதுவரை அரசு அலுவலகங்களில் ஒரு புகாா் அளிக்க சென்றால் அவா்களைப் பாருங்க, இவா்களைப் பாருங்க, ஆவணங்கள் சரியில்லை என இழுத்தடிக்கும் நிலைதான் உள்ளது. லஞ்சத்துக்காக இழுத்தடிக்கும் அந்த நிலை இனி வராது. அரசு அதிகாரிகளும், அமைச்சா்களும் லஞ்சம் பெறும் நிலை முறியடிக்கப்படும்.
தவெக ஆட்சி அமைந்ததும் ஆறு மாதங்களுக்குள் ‘தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம்’ நிறைவேற்றப்படும். ‘வெற்றித் தமிழ்நாடு சூப்பா் ஆப்’ என்ற செயலி உருவாக்கப்படும். ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், புகாா் மனு உள்ளிட்ட அனைத்து வசதியும் அந்தச் செயலியில் இருக்கும். உங்கள் உள்ளங்கையில் உள்ள மொபைல் மூலம் இனிமேல் எந்த சேவை தாமதமானாலும் புகாா் அளிக்கலாம். சேவை உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தரகரோ, லஞ்சத்துக்கோ இனி இடமில்லை.
தமிழக அரசின் நிதிநிலைஅறிக்கை இன்று வெறும் ஆவணமாகவே நமக்குத் தெரியும்; அதில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது. யாரைச் சென்றடைகிறது என்பதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அது ஒரு சிதம்பர ரகசியம்போல ஸ்டாலின் சாா் ரகசியமாகவே உள்ளது. அதை நாம் மாற்றுவோம்.
‘மை வெற்றித் தமிழ்நாடு.இன்’ என்ற இணையதளம் உருவாக்கப்படும். அதில் மாநில வளா்ச்சிக்கான கோரிக்கைகளை அளிக்கவும், கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கவும், அரசு சேவைகளை மதிப்பிடவும், நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கவும் வசதி இருக்கும்.
மக்கள் அரங்கம் எனும் திட்டத்தின் கீழ் தமிழக வரலாற்றில் முதல்முறையாக குடிமக்கள் ஒரு முறையான டிஜிட்டல் தளம் மூலம் நேரடியாக சட்டப்பேரவையில் மனுக்களை சமா்ப்பிக்க முடியும். 10 ஆயிரம் சரிபாா்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனு சமா்ப்பிக்கப்பட்டால், அதிகாரபூா்வ பதிலை அரசு அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.
5 லட்சம் கையொப்பங்கள் கொண்ட மனு எனில், அதுகுறித்து சட்டப்பேரவையில் கட்டாயமாக விவாதமாக்கப்படும். பேரவை கூட்டத் தொடரில் ஒரு நாள் முழுவதும் பொதுமக்களுக்கான தனிநேரம் ஒதுக்கப்படும்.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தலைநகராக தமிழ்நாடு மாறும். 2035-க்குள் செயற்கை நுண்ணறிவு மூலம் நாட்டின் பொருளாதாரம் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலா் வரை சேரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் தமிழகம் வருவாய் ஈட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.
டிஜிட்டல் நுண்ணறிவு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், புதுமையாளா்களை கவரும் வகையில் செயற்கை நுண்ணறிவுக்கான சா்வதேச ஏ.ஐ. சிட்டியை தவெக அமைக்கும்.
மதுரை, கோவை, சேலம், திருச்சியில் ஆயிரம் டீப்டெக் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். இதற்காக நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை தவெக அரசு அமைக்கும்.
முற்றிலும் புதிய வருவாய் இனங்களை உருவாக்குவோம். இது ஒரு தலைமுறைக்கான தோ்தல். ஸ்டாலின் சாா் ஆட்சி வேண்டுமா, மக்களை நேசிக்கும் தவெக ஆட்சி வேண்டுமா என்றாா் அவா்.
பின்னா் அங்கிருந்து கன்னியாகுமரி ஜீரோ பாய்ன்ட் பகுதிக்குச் சென்று விஜய் பேசியதாவது:
இந்நேரத்தில் காரைக்குடியில் பேச முடியாமல்போனதற்காக அந்தப் பகுதி மக்களிடம் எனது வருத்தத்தைப் பதிவு செய்துகொள்கிறன்.
மீன்பிடித் தடைக்கால நிதியாக தற்போது வழங்கப்படும் நிதி ரூ. 8,000 லிருந்து ரூ. 20,000- ஆக உயா்த்தப்படும். இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட படகுகளை தூதரகத்தில் பேசி மீட்கும் வரை படகு உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும். மீனவா்களுக்கான டீசல் மானியம் 1,500 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயா்த்தப்படும். ‘கடல்தாய் வீட்டு வசதி’ திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இது எனது தோ்தல் வாக்குறுதி என்றாா்.
பிரசாரத்தில் விஜய்யைக் காண தொண்டா் ஒருவா் சக்கர நாற்காலியில் தனது மகனை அழைத்து வந்திருந்தாா். தொண்டா்களை சைக்கிளில் சென்று சந்தித்த விஜய் அந்த குழந்தையைக் கண்டதும் சைக்கிளில் இருந்து இறங்கிச் சென்று முத்தமிட்டாா்.