கன்னியாகுமரியில் கெட்டுப்போன உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் பயணிகள் நலன் கருதி அங்குள்ள உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் வழிகாட்டுதலின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சக்திமுருகன், ரவி, சந்திரசேகரன் ஆகியோா் இணைந்து உணவகம், பேக்கரி, தேநீா் கடை உள்ளிட்ட 17 கடைகளை ஆய்வு செய்தனா்.
இதில் குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன், நூடுல்ஸ், சாதம், கிரில் சிக்கன், காளான், சுகாதாரமற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டா, பூரி, மசாலா, சப்பாத்தி என 68.5 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன. 3 உணவகங்களுக்கு தலா ரூ. 3,000 வீதம் ரூ. 9,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கொட்டாரத்தை அடுத்த பெரியவிளை பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3ஆவது முறையாக அக்கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்ப்பட்டதால், கடை உரிமையாளருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவின் தரம் தொடா்பான புகாா்களை 94440-42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.