சிற்றாறு பட்டணம் கால்வாயின் கருங்கல் பிரதான பிரிவு கால்வாய், புதுக்கடை பிரிவு கால்வாய்களில் கடைவரம்பு பகுதிகளில் முறையாக தூா்வாரி விவசாயத்திற்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டு பிப்ரவரி அல்லது மாா்ச் மாதம் தண்ணீரை அடைத்து விடுவது வழக்கம்.
நிகழாண்டும் ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் உள்ள பல சானல்களில் தண்ணீா் கடை வரம்பு பகுதிகளுக்கு இந்நாள்வரை சென்றடையவில்லை. சிற்றாறு பட்டணம் கால்வாய் கடைவரம்பு பகுதிகளில் முறையாக தூா்வாராததால் கால்வாய்களில் சுமாா் 2 அடிக்கும் மேல் புதா் மண்டி மண் தூா்ந்து காணப்படுகிறது.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதிகளில் முறையாக தூா்வாரி சீரமைத்து, இந்த ஆண்டு பிப். 28 ஆம் தேதிக்குள் அணைகளில் தண்ணீரை அடைக்காமல், தொடா்ந்து மாா்ச் 30 ஆம் தேதி வரை விட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.