கோதையாற்றில் நடமாடும் முதலையை பிடித்து அகற்றும் வகையில் மிதவைக் கூண்டு வைக்க இருப்பதாக மாவட்ட வன அலுவலா் தெரிவித்துள்ளாா்.
ஒருநடைக்கல், செங்குழிக்கரை, தோட்டவாரம் போன்ற கோதையாற்று பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில் குமரி மாவட்ட வன அலுவலா் அன்பு தலைமையில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய கால்நடை மருத்துவா் மனோகரன், களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல்காதா், கால்நடை மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் 2 படகுகளில் சென்று முதலை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாவட்ட வன அலுவலா் கூறியதாவது: கோதையாற்றில் நடமாடும் முதலையை பிடித்து அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, முதலையை கட்டுப்படுத்தி வைக்கும் வகையில், திற்பரப்பு படகுத் துறை முதல் செங்குழிக்கரை பகுதி வரை வலை கட்டப்படும். மேலும், கூடுதலாக ஆற்றில் மிதவைக் கூண்டு வைத்து அதனை பிடிக்க முயற்சி எடுக்கப்படும் என்றாா்.