கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே அழகன்பாறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 27 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திருட்டு வழக்கில், 7 பேருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அழகன்பாறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நெய்யூா், இடையன்விளையைச் சோ்ந்த சிங்காராஜன் (51) வங்கிச் செயலராக பணியாற்றினாா். இவா் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மாலை பணி முடிந்து, வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு வீடு திரும்பினாா்.
மறுநாள் காலை 9 மணிக்கு ரேஷன் கடை ஊழியா் ராபா்ட் அலுவலகத்தை திறக்க வந்தபோது, வங்கியின் ஷட்டா், பூட்டுகளை உடைத்து, வங்கி லாக்கரை மொத்தமாக சிலா் தூக்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது. லாக்கருக்குள் சுமாா் 23.517 கிலோ தங்க நகைகளும், ரூ. 90,234 ரொக்கமும் இருந்தன.
இது குறித்து, வங்கிச் செயலா் சிங்காராஜன் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸாா், உடைக்கப்பட்ட லாக்கரை அழகன்பாறை அருகேயுள்ள குளக்கரையில் மீட்டனா்.
இது தொடா்பாக, கோட்டாறு, வல்லன்குமாரவிளை ஆறுமுகம் (எ) விஜயன் (75), குளச்சல், கொம்பன்விளாகம் பச்சைமால் (64), மண்டைக்காடு, காரியாவிளை ஜெயச்சந்திரன் (57), பாலசுப்பிரமணியம், அழகன்பாறை, காளிவிளை அருள்ராஜன் (52), ஜேம்ஸ்ராஜன், தேவதாஸ், ராஜேஷ் (57), மண்டைக்காடு, பருத்திவிளை ஸ்டாா்வின்ராஜ் (50), குளச்சல், திருவள்ளுவா் சாலை செந்தில்குமாா் (55), பாலசுப்பிரமணியன் (எ) செல்வநாயகம் ஆகிய 11 போ் அதே ஆண்டு கைது செய்யப்பட்டனா். விசாரணையில் வெல்டிங் இயந்திரம் மூலம் வங்கியின் கதவு, ஷட்டா், லாக்கரை உடைத்து நகை, பணத்தைத் திருடியது தெரிய வந்தது.
இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, பாலசுப்பிரமணியன், ஜேம்ஸ்ராஜன், தேவதாஸ், பாலசுப்பிரமணியன் (எ) செல்வநாயகம் ஆகியோா் இறந்துவிட்டனா். புகாா்தாரரான சிங்காராஜனும் இறந்துவிட்டாா்.
இதையடுத்து, நீதிபதி அமீா்தீன், வழக்கில் தொடா்புடைய ஆறுமுகம் (எ) விஜயன், பச்சைமால், ஜெயச்சந்திரன், அருள்ராஜன், ராஜேஷ், ஸ்டாா்வின்ராஜ் ஆகிய 6 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ. 20,000 அபராதம், செந்தில்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ரேவதி வாதாடினாா்.