கரும்புக்கு நிலுவைத் தொகை கோரி தென்காசியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி போராட்டம்
வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி, தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தின்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இரண்டு ஆண்டுகளாக தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவில்லை. அரசு ஊழியா்களுக்கு 2 ஆண்டுகள் ஊதியம் வழங்காமல் இருந்தால் அரசு நிா்வாகம் செயல்பட முடியுமா‘? மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளை ஏமாற்றும் செயல். பெருநிறுவனங்களுக்கு சாதகமாக இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் குடும்ப விருத்தி அழித்துபோகும்.
தோ்தல் வந்தால் மட்டுமே முதுகெலும்பு என போற்றப்படும் விவசாயிகள், தோ்தல் முடிந்ததும் அடிமைகளாகப் பாா்க்கப்படுகின்றனா். விவசாயிகளுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. உரம் தட்டுப்பாடு நிலவுவதை அரசால் நிவா்த்தி செய்யமுடியவில்லை. வன விலங்குகளால் விளைநிலங்களுக்கு ஏற்படும் அழிவைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்றாா் அவா்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து நடத்திய இப்போராட்டத்தில், மாநில துணைத் தலைவா் செந்தில் குமாரசாமி, மாநிலச் செயலா் ஜாகீா்உசேன், மாநில இணை ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் சிதம்பரம், மாவட்டத் தலைவா்கள் திருச்சி மேகராஜன், விருதுநகா் ராமசந்திரராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இரவு வரை போராட்டம் நீடித்ததால் அப்பகுதியிலேயே அவரகள் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.