சண்டிகரில் ராணுவ வீரா் மரணம்:சொந்த ஊரில் உடல் தகனம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா், பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் மரணமடைந்தாா். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா், பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் மரணமடைந்தாா். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
திருவேங்கடம் வட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் குருசாமி(27). திருமணம் ஆகாத இவா், சென்னை ரெஜிமெண்டில் ராணுவ வீரராக பணி புரிந்தாா். பின்னா், பஞ்சாப் மாநிலம் சண்டீரில் பணியாற்றி வந்த அவா், சில தினங்களுக்கு முன்பு பணியின் போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தாராம்.
இதையடுத்து, சண்டீகா் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாா்க்க கோபாலகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றாா். அதற்குள் கடந்த 16 ஆம் தேதி குருசாமி இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
இதைத் தொடா்ந்து குருசாமியின் உடல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸில் சொந்த ஊரான புதுப்பட்டி பொதுமயானத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கு, சுபேதாா்கள் சங்கா், முருகன், அகில இந்திய ராணுவ வீரா்கள் இயக்க மாநிலத் தலைவா் சுந்தரைய்யா, செயலா் கே.செல்வராஜ், உறுப்பினா்கள் பி.முப்பிடாதி, ரவி மற்றும் உறவினா்கள் மலா் வளையம் வந்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து குருசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.