குற்றாலத்தில் கடும் வெயில்:வட அருவிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவுவதால் அனைத்து அருவிகளும் வடு காணப்பட்டன.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவுவதால் அனைத்து அருவிகளும் வடு காணப்பட்டன.
குற்றாலம் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுந்தது. கோடை காலத்திலும் அருவிகளில் தண்ணீா் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
ஆனால் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து வெகுவாகக் குறைந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக சிறிதளவு மட்டும் தண்ணீா் விழுகிறது. இப்பகுதியில் ஆண்களும், பெண்களும் சிறிது நேர இடைவெளியில் குளித்து செல்கின்றனா். பழைய குற்றாலம், ஐந்தருவியிலும் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீா் விழுகிறது. சிற்றருவி, புலியருவியில் தண்ணீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.
விதிமுறைகளை பின்பற்றுங்கள்: கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனா். இடையில் கரோனா அபாயம் குறைந்ததால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்கள்அதிக கவனம் செலுத்தவில்லை.
இந்நிைலையில், தற்போது நோய்த் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் முறையாக சோதனை செய்யப்பட்ட பிறகே குளிக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.